பிரம்மாண்டமாக வெளியான “புஷ்பா 2” திரைப்படத்தின் பிரீமியர் நிகழ்ச்சி பரிதாபகரமான முடிவுக்கு தள்ளியது. 39 வயதான ரேவதி என்ற பெண் ரசிகர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததுடன், அவரது மகனும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார்.
சுகுமாரின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான “புஷ்பா 2” திரைப்படம் டிசம்பர் 5 அன்று உலகமெங்கும் வெளியானது. அந்த நாளில், ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் பிரீமியர் ஷோவுக்காக அல்லு அர்ஜுன் திடீரென வந்த நிகழ்வு ரசிகர்களின் மிகப்பெரிய கூட்டத்தை உருவாக்கியது.
அந்த கூட்டத்தில் 39 வயதான ரேவதி என்ற பெண் ரசிகர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மகனும் கூட்டத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்த துயர செய்தியறிந்த அல்லு அர்ஜுன், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி அறிவித்து, தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
இந்நிலையில், தெலுங்கானா போலீசார், அல்லு அர்ஜுனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சந்தியா திரையரங்க நிர்வாகிகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அல்லு அர்ஜுனை சிக்கட்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வால் பிரபலங்களின் வெளியீட்டு நிகழ்ச்சிகளில் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் மீதான கேள்விகள் எழுந்துள்ளன. இந்த வழக்கின் முடிவுகள் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாக அமைய வாய்ப்பு உள்ளது.